இரண்டு ஆச்சாரியார்கள் தனி உரிமையும் மதமும் வேண்டுமாம் - தேசீயத்துரோகி. குடி அரசு - கட்டுரை - 20.12.1931 

Rate this item
(0 votes)

 மத நடுநிலைமையின் ஆபத்து

நாசிக்கில் உள்ள கோயிலில் பிரவேசிக்கவும், “ராமகுண்டம்” என்னும் தீர்த்தக் குளத்தில் குளிக்கவும் தீண்டாதார்கள் சத்தியாக்கிரகம் செய்து வருகின்றனர். இச்சத்தியாக்கிரகத்தை வைதீக இந்துக்கள் தடுத்து வருகின்றனர். இதைப்பற்றி "இந்திய சனாதன வைதீகசபைத் தலைவர், திரு.காசிகிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அவ்வறிக்கையில்,

"நாசிக்குக்காக மிஸ் மேயோவை மறுபடியும் இந்தியாவின் மீது கிளப்பி விட்டுவிடாதீர்கள். சனாதன தர்மிகளும் , பஞ்சமர்களும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஒருகாரியத்தையும் செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். சத்தியாக் கிரகத்தின் நோக்கம் "சத்தியத்தைக் காப்பதேயாகும்" "ராமகுண்ட தீர்த்தம் பொதுச்சொத்தல்ல. அது பொதுச் சொத்தாக இருந்தால் தான், தீண்டாதார்களும் ஜாதி இந்துக்களைப் போல அதில் உரிமைக் கொண்டாட முன்வரலாம். காங்கிரசும் மற்றும் பொருப்புள்ள ஸ்தாபனங்களும், மூலாதார உரிமைகளை ஒப்புக்கொண்டிருக்கின் றன. சொந்த அதிகாரமுள்ள சொத்துக்களையும், தர்ம ஸ்தாபனங் களையும் பொதுச்சொத்துக்களாக மாற்ற மேற்படி ஸ்தாபனங்கள் ஒப்புக் கொள்ள முடியாது"

என்ற விஷயங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து காங்கிரஸ் மதநடுநிலைமையின் ஆபத்தை உணரலாம். எந்தக் கோயில்களும், தர்ம ஸ்தாபனங்களும் ஒருவர் அதிகாரத்திலேயோ, அல்லது ஒரு கமிட்டியின் அதிகாரத்திலேயோ அடங்கிதான் இருக்கும். அப்படிப்பட்ட ஸ்தாபனங் களில் மற்றவர்கள் பிரவேசிக்க உரிமையில்லை என்பதே திரு ஆச்சாரியா ரின் வாதம். இதுதான் காங்கிரசின் நடுநிலைமைக்கும் வியாக்யானம். இந்நிலைமையில் தீண்டாதவர்கள் எப்படி பொது ஸ்தாபனங்களில் சமத்து

வம் பெற முடியும் ? " மிஸ் மேயோவைக் கிளப்பிவிட வேண்டாம்” என்று திரு ஆச்சாரியார் கூறிகிறார். யார் மிஸ் மேயோவைக் கிளப்பிவிடுகிறவர்? ஒரு குளத்தில் தீண்டாதவர்களும் குளிப்பதற்காகத் தடைகூறும், திரு. ஆச்சாரியார் போன்றவர்கள் மிஸ் மேயோவை கிளப்பிவிடுகிறார்களா? அல்லது குளத்தில் குளிக்க எங்களுக்கும் பாத்தியம் வேண்டுமென்றுக் கேட்கின்ற தீண்டாதவர்கள் கிளப்பிவிடுகிறார்களா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். சத்தியாக்கிரகம் என்றால் சத்தியத்தைக் காப்பாற்றுவதாம்! எது சத்தியம்? நாசிக் கோயிலில் ஜாதி இந்துக்கள் மாத்திரம் செல்ல உரிமை இருப்பது சாத்தியமா? "ராமகுண்டம்" என்னும் குளத்தில் ஜாதி இந்துக் களுக்கு மாத்திரம் குளிக்க உரிமையிருப்பது சாத்தியமா? இவைகளில் தீண்டாதார்கள் பிரவேசிக்காமலிருப்பது சாத்தியமா? திரு ஆச்சாரியார் கருத்துப்படி தீண்டாதவர்கள், தீண்டாதவர்களாகவே ஒன்றிலும் சுதந்திரம் இல்லாமலிருப்பதும், ஜாதி இந்துக்கள் வழக்கமாகத் தங்களுக்குள்ள ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதுந் தான் சத்தியம் என்று கருதுகிறார் எனத் தெரிகிறது.

இது சாத்தியமானால், இதற்காக சத்தியாக்கிரகமானால், இதை மற்றொரு வருணாச்சிரம தர்மம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆகையால் இத்தகைய சத்தியம் வேண்டவே வேண்டாம். இன்னும் எத் தனை மேயோக்கள் வந்தாலும் வரட்டும், அதைப்பற்றி கவலையில்லை. வேண்டுவது எல்லாருக்கும், எல்லாவிடங்களிலும் சமவுரிமை தான். கோயில்களும், தர்ம ஸ்தாபனங்களும், சிலருடைய ஆதிக்கத்திலிருந் தாலும் அவைகள் பொதுச் சொத்துக்கள் தான். அவைகளைப் பொதுச் சொத்துக்களாக ஆக்கித் தேசத்திற்கு பயன்படச் செய்யவேண்டுமென்பது தான் நமது கொள்கை. இதற்குத் தற்கால நிலைமையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காது. 

மதத்தைக் காப்பாற்ற வேண்டும்

நமது சனாதன வைதீக நண்பர், திரு.எம்.கே ஆச்சாரியார் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரசாங்கத்தார், மதவிஷயங்களில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பதை ஞபாகத்தில் வைத்திருப்பார்கள் என்றும், இதைப்பற்றி வட்டமேஜை மகாநாட்டில் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், லார்ட் இர்வின் இந்தியாவை விட்டுப் புறப்படுமுன் பாரத தர்ம மகா மண்டலத்திற்கு உறுதி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், சாரதா சட்டம் சம்பந்தமாக அவர் நடந்து கொண்டதிலிருந்து இவ்வுறுதிமொழி பயனற்ற தாகும். சாதாரண ஐரோப்பியர்களுக்கும், நவீன நாகரீகத்திலுள்ள இந்தியர் களுக்கும் "மதம்" என்பதன் கருத்து வைதீக இந்துக்களுக்கு இருப்பது போல் தோன்றுவதில்லை. "மதத்திற்கும் கல்யாணம் போன்ற சமூக 

விஷயங்களுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது" என்று அவர்கள் கூறுகின்ற னர். இவர்கள் எது மத விஷயம்? எது மதவிஷயமல்லவென்பதில் தங்கள் அபிப்பிராயத்தை வைதீக இந்துக்களின் மேல் பலவந்தமாக சுமத்த அனுமதிக்கக்கூடாது. இதே மாதிரி காங்கிரசும் மத சுயேட்சை அளிப்பதாக உறுதி கூறியிருப்பதும் பிரயோஜனமற்றதாகும். காந்திக் கட்சியினர் " ஆலய சத்தியாக்கிரகம்" என்று கூறுவதைக்கொண்டும், "தீண்டாமையை ஒழிப்ப தாகக் கூறுவதைக் கொண்டும்” மதவிஷயத்தில் அவர்கள் நடுநிலைமை வகிக்கும் விதம் விளங்குகின்றது. மேல் நாடுகளில் மதத்தையே ஒழித்து விட்டனர். இந்தியாவிலும் ஒழிக்க முயலுகின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது"

என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து சீர்திருத்த விஷயத்தில் வைதீகர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்ற விஷயத்தைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.

அரசாங்கத்தார் சாரதா சட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டதனால், அரசாங்கம் மத நடுநிலைமை வகிக்கவில்லையாம். கல்யாணம் போன்றவை கள் மதவிஷயங்களாம். அப்படியானால், சாப்பிடுவது, குளிப்பது, பல் விளக்குவது, ஒன்றுக்குப் போவது, வெளிக்குப் போவது முதலியவைகளும் மத விஷயங்கள் தான் போலும். இவைகளுக்கும் தான் சாஸ்திரங்களில் விதிகள் கூறுகின்றன. "மற்ற வருணத்தாருடைய சொத்துக்கள் எல்லாம் பிராமணருக்கே சொந்தமானது'' என்பது பார்ப்பனர்களின் ஸ்மிருதிக் கொள்கை. ஆகையால் இதுவும் மத விஷயம் ஆனதால் பார்ப்பனர்கள் யார் வீட்டில் கொள்ளையடித்தாலும், யார் சொத்துக்களைக் கவர்ந்தாலும் அவர்களைப் பிடிக்கவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ பொது ஜனங்க ளுக்கும், அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அதிகாரமில்லையென்றும் சொல்லலாம். இதுவும் மத விஷயம்தானே! இவற்றில் எல்லாம் அரசாங்கத் தார் நடு நிலைமை வகிக்க வேண்டும் என்று சொல்லுவது போலத்தான் சமூகச் சீர்திருத்த சட்டங்களுக்கு அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கக் கூடாது என்று சொல்லுவதும், ஆதரவு அளித்தால் அரசாங்கத்தார் மதத்தில் தலையிட்டு விட்டார்கள் என்று சொல்லுவதும் ஆகும். அடுத்தபடியாக, மதம் என்பதன் கருத்து வைதீக இந்துக்களுக்குத் தோன்றுவதுபோல் நாகரீகமுடையவர்களுக்குத் தோன்றுவதில்லையாம். இது உண்மைதான். நவீன நாகரீகமும், ஆராய்ச்சியும், அறிவும் உடையவர்களுக்கு மதம் இன்னது சமூக விஷயம் இன்னது என்று தெரியும். ஆகையால், அவர்கள் சமூகச் சீர்திருத்தஞ் செய்வதற்குப் பின்வாங்க மாட்டார்கள். வைதீக இந்துக்கள் பகுத்தறிவற்றவர்கள். சுருங்கவும் விளங்கும்படியும் கூற வேண்டு மானால் முட்டாள்கள் ' ஆகையால் அவர்கள் சமூக விஷயங்களையும் மதம் மதம் என்று சொல்லிக் கொண்டு ஒரு சீர்திருத்தத்திலும் மன மில்லாமல் பழைய இருட்டு உலகத்திலேயே வசிக்க விரும்புவார்கள்.

ஆகையால், வைதீகர்கள் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்தால் தான் சமூகம் முன்னேற்றம் அடைய முடியும். திரு. ஆச்சாரியார் போன்றவர் களின் அபிப்பிராயத்தால் சமூகம் சமத்துவமும், விடுதலையும் பெற முடியாது என்று சொல்லுகிறோம்.

அடுத்தபடியாக, காங்கிரஸ் ஒரு காரியமும் செய்யாமலிருக்கும் போதே, காங்கிரசைச் சேர்ந்த சிலர் வாயளவில் ஆலய சத்தியாக்கிரகத்தை ஆதரித்துப் பேசும்போதே, காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை போகவேண்டு மென்று மேடைக் கூச்சலிடும்பொழுதே நமது திரு . ஆச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் மத நடுநிலைமை தவறிவிட்டது என்று கூச்சலிட ஆரம்பித்து விட்டார். உண்மையிலேயே காங்கிரஸ் இவ்வேலைகளைச் செய்ய எண்ணு மானால் நிச்சயமாக நமது திரு ஆச்சாரியார் போன்ற வைதீகர்கள் அதை ஒழித்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தபடியாக, மேல் நாட்டில் மதம் ஒழிந்துவிட்டதாம். நமது நாட்டில் அப்படி ஒழியாமல் பாதுகாக்க வேண்டுமாம். மதம் பாதுகாக்க வேண்டுமென்றால் பிராமண ஆதிக்கம் நிலைநிற்க வேண்டுமென்று தானே அர்த்தம். இனியும், மதத்தைக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரிக்கிறோம். பகுத்தறிவும், கஷ்டமும், பொருளாதாரச் சங்கடமும் அதிகப்படுகின்ற காலத்தில் மதம் தூள் தூளாகப் பறக்கவேண்டியதைத் தவிர நிலைக்க முடியாது. ஆகையால் திரு. ஆச்சாரியார் வீண் கனாக் காண வேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கின்றோம்.

குடி அரசு - கட்டுரை - 20.12.1931

Read 68 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.